Thursday, 8 March 2012

அப்போலோ மற்றும் மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் வெற்றிகரமாக நான்காவது நாளை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த கார்பொரேட் மருத்துவ நிறுவனங்கள் நவீன மருத்துவம் என்கிற பெயரில் நோயாளிகளின் கடைசிச் சொட்டு ரத்தம் வரை உறிஞ்சுவது தவிர நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ மனை ஊழியர்கள் மீது மேற்கொல்ளும் சுரண்டல் கொடுமை சொல்லி மாளாது. கார்பொரேட் கொடூரங்களை எதிர்த்து ஊழியர்கள் வெளிக் கிளம்புவது மிக அபூர்வம். குறைந்த பட்ச ஊதியம் 15000 ரூபாய் என்பது உள்ளிட்ட மிக நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராடும் அவர்களின் போராட்டத்தை நாம் எல்லோரும் ஆதரிக்க வேண்டும். க்ரீம்ஸ் சாலையிலிருந்த வாலஸ் கார்டனில் குடியிருந்த குடிசை மக்களை விரட்டி அடித்து அப்போலோவுக்கு நிலத்தை வழங்கியது எம்.ஜி.ஆர் அரசு. கார் பார்கிங் எனச் சொல்லி இடத்தைச் சலுகையில் வாங்கிப் பின் அதை செந்தூரி ஓட்டலாக இன்று கட்டிக் கொள்ளை அடிக்கிற நிறுவனம் அப்போலோ (பார்க்க: எனது, 'சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்'). மெடிகல் டூரிசம் என்கிற பெயரில் ஏகப்பட்ட சலுகைகளை இந்திய அரசு இந்நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ளது. டில்லி இந்திர பிரஸ்தாவிலுள்ள அப்போலொ மருத்துவமனைக்கு ஏக்கர் ஒரு ரூபாய் என நிர்ணயித்து நிலம் வழங்கியது இந்திய அரசு (பார்க்க: அதே நூல்). பதிலாக ஏழை எளியவர்களுக்குக் குறிப்பிட்ட சதம் இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். அதை இந்த நிறுவனம் நிறைவேர்றுவதில்லை. இதை அரசு கண்டுகொள்வதுமில்லை. மாறாக public private partnership என்கிற பெயரில் ஏகப்பட்ட சிறப்புரிமைகள் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.( பார்க்க: எனது, 'மருத்துவ நலப் பிரச்சினைகள்'). கார்பொரேட் சுரண்டல் நமது யுகத்தின் ஆகப் பெரிய கொடுமை. கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளி வர்கத்திற்கு ஆதரவாக அணி திரள்வோம்!

No comments:

Post a Comment