Thursday, 8 March 2012

இரண்டு நாட்களுக்கு முன்னர் மார்க்ஸிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் திருச்சியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை இலங்கை அரசுதான் விசரிக்க வேண்டும், வெளி நாட்டுத் தலையீட்டை ஏற்க இயலது எனச் சொல்லியிருந்தார். ஐ.நா அவையில் இந்திய அரசு கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்கிற குரல் தமிழகத்தின் பல தரப்புகளிலிருந்தும் எழும் நிலையில் அவர் அப்படிக் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது. குற்றம் செய்தவரே குர்றத்தை விசாரிக்க வேண்டுமாம் எனக் கிண்டலாக அச் செய்தியை எக்ஸ்பிரஸ் இதழ் பதிவு செய்திருந்தது. அடுத்த நாள் கட்சியின் பொதுச் செயலளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் நடைபெர்ற ஆர்பாட்டத்தை ஒட்டிப் பலர் கைதாயினர். போரில் பாதிப்படைந்தவர்களின் மீள் குடியேற்றத்தை வற்புறுத்தி அந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. பலரும் நினைப்பதுபோல மார்க்சிச்ட் கட்சி ஒரு damage control exercise ஆக இந்த இரண்டாம் நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட அது வரவேற்கத் தக்கதே. ஈழத்திலுல்ள மக்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றிக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் இங்கொரு அரசியல் நடந்து கொண்டுள்ள போது இந்தக் கோரிக்கையை அவர்கள் நினைவூட்டியது வரவேற்கத்தக்கதே. இன்னுங் கொஞ்சம் உடனடிக் கோரிக்கைகளையும் அவர்கள் சேர்த்திருக்க வேண்டும். போர்க் குற்ற விசாரணை தொடர்பான அவர்களின் நிலைபாடுதான் கவலை அளிக்கிறது. அமெரிக்காவின் நோக்கமும் இலங்கை மீதான அதன் ஆதங்கமும் நமக்குப் புரியாமலில்லை. ஐ.நா அவை அதன் எடுபிடியாக உள்ளதென்றபோதிலும் ஐ.நா அவையின் தலையீட்டை வெளிநாட்டுத் தலையீடு எனச் சொல்ல முடியுமா? ஐ.நா அவை தீர்மானத்தை அப்படிக் கருதிவிட இயலுமா? இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு நீதியான விசாரணையை அங்குள்ள அரசே நடத்திவிட இயலுமா? இப்படியான ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட அளவு வெளி அழுத்தம் இல்லாமல் எப்படி போர்க் குற்றங்களில் நீதி கிடைக்கும்? ஈராக், ஆப்கனிஸ்தான் நாடுகளின் மீதான ஆக்க்ரமிப்புத் தாக்குதல்களைப் போன்ற ஒன்றை நாம் எந்த நாட்டின் மீதுமே ஏற்றுக் கொல்ள இயலாதெனினும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களைக் கூடக் கொடுக்கக் கூடாதென்பது எப்படிச் சரியாக இருக்கும்?

No comments:

Post a Comment